நெல்லை மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக நெல்லை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பதிவாகியுள்ளது.
மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மழையின் காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை 2 அடி உயர்ந்து 78.30 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,121 கன அடியாக உள்ளது. இதேபோல், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் தலா 1 அடி வரை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 90 மி.மீ, நாலுமுக்கில் 72 மி.மீ, காக்காச்சியில் 67 மி.மீ மற்றும் மாஞ்சோலையில் 52 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் ராதாபுரத்தில் 45 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 44 மி.மீ மற்றும் மூலக்கரைப்பட்டியில் 30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.









