நெல்லை பேட்டை ரயில் நிலையம் அருகே ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியைத் தாக்கி, அவதூறாகப் பேசி, புகைப்படம் எடுத்து மிரட்டியதுடன், அவரிடமிருந்த செல்போன் மற்றும் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு சிறார்களைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
நெல்லை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், சம்பவத்தன்று பேட்டை ரயில் நிலையம் அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், திடீரென சிறுமியிடமும் அவரது நண்பரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளது. அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசிய அக்கும்பல், சிறுமியைத் தாக்கியுள்ளது. மேலும், சிறுமியைத் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வைத்து மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து, அச்சிறுமியிடம் இருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் அந்த கும்பல் வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
மிரட்டி நகைகளைப் பறித்த குற்றத்திற்காகப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் தீவிர விசாரணையில், நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21) மற்றும் இரண்டு சிறார்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சுரேஷை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சிறார்களில், ஒரு சிறார் ஏற்கனவே வேறொரு வழக்கில் பிடிபட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றொரு சிறாரைப் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

