தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தொடர் மழையால் தேங்கிய நீரை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 4 மண்டலங்களிலும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநகரின் முக்கியப் பகுதிகளான டபிள்யூ.ஜி.சி. சாலை, பீச் ரோடு மற்றும் சாந்தி நகர், பொன்னாண்டி நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீர், அதிநவீன மோட்டார்கள் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், மழைநீர் வடிகால்களில் ஏற்பட்ட அடைப்புகளும் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு நீர் சீராக வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கிய இடங்களில் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் நோக்கில், கிருமிநாசினி தெளித்தல் மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறித்து புகார் தெரிவிக்க ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் 1800 203 0401 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

