வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே இருசக்கர வாகன ஓட்டியைக் காப்பாற்ற முயன்றபோது லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்.
காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி பொலேரோ லோடு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா, வேப்பங்கநேரி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோயில் அருகே காட்பாடி – குடியாத்தம் நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் திடீரென தாறுமாறாக வந்துள்ளது.
அப்போது இருசக்கர வாகன ஓட்டி மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து அவர்களை மீட்க முயன்றனர். எனினும், தங்களுக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனக் கூறி இருவரும் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டனர். நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

