வாணியம்பாடி அருகே பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியில் பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தவர் சேகர். இவர் நேற்று வழக்கம்போல் பணிகளை மேற்கொள்வதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், கல்லூரி வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த சேகர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உயிரிழந்த தனியார் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர் உயிரிழந்த பிரியதர்ஷினி கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர் சேகரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகி சேகர் உயிரிழந்தது தொடர்பாக தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரியதர்ஷினி கல்லூரி நிர்வாகம் மற்றும் சேகரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சேகர் எழுதியதாக ஆங்கில கடிதம் ஒன்றை அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த கடிதத்தில், “அரக்கன் விஜயராஜிடம் இருந்து இந்த அறக்கட்டளை, ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சில ஏழ்மையான பெண் அறங்காவலர்களை காப்பாற்றுவதற்காகத்தான் இந்த தியாகத்தை செய்கிறேன். விஜயராஜ் ஆர்.ஐ.டி. போன்று இந்த அறக்கட்டளையையும் அழித்துவிடுவார். அனைவரும் எனக்காக பிராத்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சேகர் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கலாம் என்றும், சேகர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரக்கனிடம் இருந்து, அறக்கட்டளை ஊழியர்களையும், மாணவர்களையும் காப்பாற்றவே இந்த தியாகம் என கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம், வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

