திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 7 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குரிசிலாப்பட்டு அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமனின் மனைவி சங்கீதா (27) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டன. இதேபோல், ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜதிலகம் (40) என்பவரது வீட்டிற்குள் கடந்த 23.05.2026 அன்று புகுந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,25,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த சகாதேவன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளன.
இந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து குரிசிலாப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சக்திவேல் (21) என்பவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புதூர், ஆண்டியப்பனூர் மற்றும் பெருமாபட்டு ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களில் சக்திவேலுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்து 7 சவரன் தங்க நகைகளை மீட்ட காவல்துறையினர், அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவங்களில் தொடர்புடைய மற்ற நபர்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

