தமிழ்நாட்டில் தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நாளை ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம் என்பதால் அதிகளவு திருமணங்கள் நடைபெற உள்ளது. எனவே திருநெல்வேலியில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி சந்திப்பு பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ அதிகப்பட்சம் ரூ.2,000ம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிச்சிப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்தி பூ கிலோ நேற்று வரை கிலோ ரூ.300க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ.500க்கு விற்பனையாகிறது. ரோஜாப்பூவை பொறுத்தவரை ஒரு கட்டு ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டில் 20 ரோஜாப்பூக்கள் உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஊட்டி ரோஸ் ஒரு பூ நேற்று ரூ.20க்கு விற்ற நிலையில் இன்று ரூ.30க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில் கேந்தி பூவின் விலை மட்டும் ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுகிறது. கேந்தி பூ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தொடர் முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட காரணங்களால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வறட்சி மற்றும் கடும் வெயிலால் சில பூக்களின் வரத்து மற்றும் தேவைக்கு ஏற்ப விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விழாக்காலம் என்பதால் பூக்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி வரும் நிலையில், குறிப்பாக மல்லிகை மற்றும் பிச்சிப்பூவின் விலை உயர்வு பொதுமக்களிடையே பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் பூக்களின் வரத்து மற்றும் தேவையை பொறுத்து விலையில் மேலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்திகள்
பூக்களின் விலை கிடுகிடு உயர்வு. மல்லிகை கிலோ ரூ.2,000க்கும் பிச்சிப்பூ ரூ.1,500க்கும் விற்பனை
🕒 12 செப்., 2026, 09:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •தொடர் முகூர்த்தம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை எதிரொலி; நெல்லையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு. மல்லிகை கிலோ ரூ.2,000க்கும் பிச்சிப்பூ ரூ.1,500க்கும் விற்பனை
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
