விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பிளக்ஸ் பேனர் மற்றும் மைக் செட் அமைப்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் இருவேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பிளக்ஸ் பேனர் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், நீதிமன்ற அனுமதி இல்லாமல் கிராமத்தில் எந்தவொரு ஜாதி சார்ந்த நிகழ்ச்சி அல்லது சுப நிகழ்ச்சிகளுக்கும் மைக் செட் மற்றும் பிளக்ஸ் பேனர் அமைக்கக் கூடாது என இரு தரப்பினரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஒரு பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்காக மைக் செட் மற்றும் பிளக்ஸ் பேனர் அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைக் செட் அகற்றப்படாத நிலையில், இம்மானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு மற்றொரு தரப்பினர் தங்களது பகுதியில் கொடிக்கம்பம், மைக் செட், பிளக்ஸ் பேனர் மற்றும் சீரியல் விளக்குகள் அமைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருமண நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மைக் செட்டை அகற்றுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த மைக் செட் அகற்றப்பட்டது.
அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் அமைத்திருந்த கொடிக்கம்பத்தை அகற்ற அவர்கள் முன்வராததால், போலீசாரே கொடிக்கம்பத்தை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், போலீசார் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், தங்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கிராமத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

