மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்மையையும், குழந்தை பிறப்பின் பெருமையையும் உணர்த்தவும், அரசு மருத்துவமனைகளில் நிகழும் குழந்தை பிறப்பை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 28.09.2026 அன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயனாளிகளுக்கு தங்க மோதிரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதன்படி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, EKYC பதிவு பெற்ற ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆறு தமிழ்நாடு குடியிருப்பு அடையாளச் சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் ஒரு அடையாளச்சான்று பெற்ற தாய்மாராக இருக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்டதில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவித்த 1649 பயனாளிகளுக்கு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு 50 பயனாளிகள் வீதமும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பயன்பெறும் வட்டாரங்கள் நாளொன்றுக்கு 50 பயனாளிகள் வீதம் 28.09.2026 அன்று முதல் 08.10.2026 வரை 1594 பயனாளிகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயனாளிகளின் வசதிக்காக அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலமாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோதிரம் காலை 10.00 மணி மற்றும் மதியம் 1.00 மணி என இரு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் காலை 25 பேருக்கும் மதியம் 25 பேருக்கும் மட்டுமே மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 28.09.2026 தேதிக்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவம் நடைபெறும் அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே மோதிரம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மேலும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த பயனாளி திருமதி.பார்வதி என்பவர் தெரிவிக்கையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் எனது குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கப்பட்டிருப்பது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியுடன் அரசின் இந்த நலத்திட்டத்தின் மூலம் தங்க மோதிரம் கிடைத்திருப்பது எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. எங்களைப் போன்ற ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதாரச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்தகைய சிறப்பானதொரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நிறைந்த மனதுடன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என திருமதி.பார்வதி என்பவர் தெரிவித்தார். செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், அரியலூர்.

