விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல்
- இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல்
- ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு–1 மற்றும் தேர்வு–2-க்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 40% ஆக நிர்ணயித்து வெயிட்டேஜ் வழங்குதல்
- அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல்
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துதல்
அரசிடம் கோரிக்கை
20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிட்டோஜேக் வலியுறுத்தியது.

