கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை பகுதியில், குட்டியுடன் வந்த கரடி தாக்கியதில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட்டில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருபவர் மோசஸ் (51). இவர் நேற்று மாலை ரொட்டிக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கியுள்ளார். பின்னர், தேயிலை தோட்டம் வழியாக பச்சமலை எஸ்டேட்டில் உள்ள தனது குடியிருப்புக்குச் செல்லும் வழியில், நீரோடை அருகே அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, தேயிலை தோட்டப் பகுதியில் குட்டியுடன் நடமாடிய கரடிகள் திடீரென மோசஷை தாக்கியுள்ளன. இதில் அவரது தலை, முகம் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பொதுமக்களும், வனத்துறையினரும் இணைந்து அவரை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

