சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அரசு மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 'ஸ்டார் பிரண்ட்ஸ் ஆஃப் ரோட்டரி கிளப்' சார்பில் மாநில அளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிய இந்த ஓட்டம், சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறைவடைந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இப்போட்டியை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் ரோட்டரி சங்க ஆளுநர் காந்தி ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். போட்டியைத் தொடங்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து சிறிது தூரம் ஓடிச் சென்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறைவடைந்த இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்படி, கோவையைச் சேர்ந்த சதீஷ் முதல் பரிசான ரூ. 25,000-ஐத் தட்டிச் சென்றார். பெங்களூரைச் சேர்ந்த பிரதீப் குமார் இரண்டாம் பரிசான ரூ. 15,000-யும், ஊட்டியைச் சேர்ந்த நிகில்குமார் மூன்றாம் பரிசான ரூ. 8,000-யும் வென்றனர்.
நெகிழ்ச்சி சம்பவம்:
இப்போட்டியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து அரசுப் பள்ளி மாணவர்கள் காலணிகள் (ஷூ) ஏதுமின்றி வெறும் கால்களுடன் ஓடியதைக் கண்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் நெகிழ்ச்சியடைந்தார். உடனடியாக அந்த மாணவர்களுக்குத் தன் சொந்தச் செலவில் புதிய ஷூக்களை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். எம்.எல்.ஏ-வின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றது.

