அருப்புக்கோட்டை பகுதி அலுவலகத்தில் பொதுமக்களின் வசதிக்காக இனி சனிக்கிழமைகளிலும் புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அருப்புக்கோட்டை பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் (MVI) பணியிடம் தற்போது காலியாக உள்ளது. இதனால் புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வரும் பொதுமக்கள் சில்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு ஏற்படும் காலதாமதம் மற்றும் அலைச்சலை குறைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமைகளிலும் புதிய ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நடவடிக்கை மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

