பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நுண்ணூட்டச் சத்துகள் இருப்பு மற்றும் பாசன நீர் தேவைகள் குறித்து வேளாண்மைத் துறை இயக்குனர் முரளிதரன் பாபநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அவர் விவசாய நிலங்களுக்குச் சென்று பயிர்களின் வளர்ச்சி, சாகுபடி முறைகள் மற்றும் பாசன வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ரேவதியும் உடனிருந்தார்.
2.21 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 945 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் 2 லட்சத்து 21 ஆயிரத்து 550 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. இந்நிலையில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா, வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக விவசாயிகளைச் சென்றடைகிறதா என்பது குறித்து வேளாண்மைத் துறை இயக்குனர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
பாபநாசம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, விவசாயிகளின் நில உடமைப் பதிவேடுகள் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்புக்கும், நேரடியாகக் கிடங்குகளில் உள்ள இருப்புக்கும் இடையே வேறுபாடு உள்ளதா என்பதையும் அவர் சரிபார்த்தார்.
பயிர் காப்பீடு விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்: தொடர்ந்து பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு வாகனத்தை வேளாண்மைத் துறை இயக்குனர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பயிர் பாதிப்புகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைக் குறைப்பதில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பங்கு குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஒரே இடத்தில் 5 நெல் ரகங்கள் ஆய்வு: இதைத்தொடர்ந்து கோபுராஜபுரம் ஊராட்சி பெருமாங்குடி கிராமத்தில் அனுசரணை ஆராய்ச்சி திடல் திட்டத்தின் கீழ் ஒரே இடத்தில் 5 வகையான நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயலைப் பார்வையிட்டார். அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல் ரகங்களின் தன்மைகள், அவற்றின் நடவு செய்யப்பட்ட காலம் மற்றும் பயிர்களின் வளர்ச்சி நிலை ஆகியவை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். வெவ்வேறு நெல் ரகங்களை ஒரே பகுதியில் சாகுபடி செய்து அவற்றின் வளர்ச்சி மற்றும் விளைச்சல் தன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான இந்த முயற்சியில் முழு ஒத்துழைப்பு வழங்கிய விவசாயி சுந்தரவேலுக்கு வேளாண்மைத் துறை இயக்குனர் பாராட்டு தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் ஆய்வு: மேலும் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்க விவசாய நிலத்தையும் அவர் பார்வையிட்டார். அம்மாப்பேட்டை ஒன்றியம் களஞ்சேரி ஊராட்சியில் அனுசரணை ஆராய்ச்சி திடல் திட்டத்தின் கீழ் விவசாயி பிரபாகரன் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மாத வயதுடைய நாற்றங்காலையும் ஆய்வு செய்தார். அதன் வளர்ச்சி நிலை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
பாசன நீர் தேவையை கேட்டறிந்த அதிகாரிகள்: தொடர்ந்து நல்லவன்னியன்குடிகாடு ஊராட்சியில் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு அப்பயிர்களுக்கு நுண்ணூட்டச் சத்து தெளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பயிர்களின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான பாசன நீரின் அளவு, தற்போதைய நீர் இருப்பு, பாசன வசதிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக விசாரித்தார்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தண்ணீர் மற்றும் இடுபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகியுள்ளது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நேரடி ஆய்வு விவசாயிகளின் தற்போதைய தேவைகளை அறிந்து கொள்வதற்கான முக்கியமான நடவடிக்கையாக அமைந்தது. இந்த ஆய்வின்போது கலெக்டர் ரேவதி, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சாருமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல், வேளாண்மைத் துறை துணை இயக்குனர் அய்யம்பெருமாள், வேளாண்மை உதவி இயக்குனர்கள் மோகன், ராஜதுரை, தாசில்தார் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.









