விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 3 வயது சிறுமியின் உயர் சிகிச்சைக்கு உதவக் கோரியும், இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி வேண்டி பெற்றோர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்திராயிருப்பு தாலுகா, வ.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெரோம் (26) - திவ்யா (20) தம்பதியருக்கு, ஜோஸ்லின் என்ற 3 வயது மகள் உள்ளார். வறுமை நிலையில் ஓட்டு வீட்டில் வசித்து வரும் இத்தம்பதியின் மகள் ஜோஸ்லினுக்கு, பிறவியிலேயே இதயத்தில் பெரிய துளை இருப்பதும், இதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் வால்வு வளர்ச்சி அடையாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.
சிறுமியின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக 3 கட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்குச் சுமார் ரூ.20 லட்சம் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அன்றாடக் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் இக்குடும்பத்தினரால் இந்த பெருந்தொகையைத் திரட்ட முடியாததால், அரசிடம் உதவி கோரி முறையிட்டனர். இதுகுறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகிப் பலரின் கவனத்தையும் ஈர்த்தன.
இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், சிறுமியின் நிலை குறித்து முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்று, தேவையான மருத்துவ உதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், தனியார் மருத்துவமனை ஒன்றிற்கும் பரிந்துரை செய்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிறுமியைக் காப்பாற்றுவது கடினம் எனக் கூறியதாகவும், அதன்பின்னர் அமைச்சர் தரப்பில் இருந்து எந்தவிதத் தொடர் உதவியும் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், முதலமைச்சரை நேரில் சந்தித்துத் தங்களின் நிலையைக் கூறவும், மகளின் உயிரைக் காப்பாற்ற அரசு உடனடி நிதி உதவி வழங்கி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அத்தம்பதியினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

