பழனி பகுதியில் உள்ள சில நியாய விலைக் கடைகளில் ரேஷன் அரிசி முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகச் சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மர்ம நபர் ஒருவர் நியாய விலைக் கடை ஊழியர்களைத் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாகத் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பணம் கேட்டு மிரட்டும் நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றால், அவர் அழைப்பை ஏற்காமல் தவிர்த்து வருவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் நியாய விலைக் கடைப் பணியாளர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதோடு, ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்க முயலும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட நபரின் தொலைபேசி எண்ணைக் காவல்துறையினரிடம் வழங்கி முறைப்படி புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.









