தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாசில்தார், வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் நிலவும் சாகுபடி பாதிப்புகள், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் கடன் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்துப்போனதை அடுத்து, தற்போது சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளதாகத் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், எனவே மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்குவதோடு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெரமூர் அறிவழகன் பேசுகையில், நீர்வழித் தடங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய தனிக்குழுவை அமைக்க வேண்டும் என்றார். காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் மற்றும் மணத்திடல் சிவக்குமார் ஆகியோர் பேசுகையில், பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான காலக்கெடுவை டிசம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தள்ளுபடி நடைமுறைகள் குறித்த குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரினர். விளாங்குடி இளங்கோவன் பேசுகையில், புனவாசல் வடிகால் வாய்க்காலை இடைப்பட்ட பகுதிகளிலும் முழுமையாகத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









