நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள உடையார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், காலாண்டுத் தேர்வு எழுதுவதற்காக மாணவர்களிடம் கட்டாயக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது புகார்கள் எழுந்துள்ளன.
கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இப்பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மலைவாழ் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வுக்காக மாணவர்களிடம் தலா ரூ.250 முதல் ரூ.400 வரை அரசு விதிமுறைகளை மீறி கட்டாயமாக வசூலிக்கப்பட்டதாகவும், பணம் செலுத்திய பின்னரே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சமீபத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது. அப்போது, அதே பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் நல்லதம்பி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது உண்மைதான் என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததுடன், இதற்கான அரசாணையைத் தலைமை ஆசிரியரிடம் பெற்று ஒப்படைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 4ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. எனினும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டபோது, உரிய பதில் அளிக்காமல் சமாதானம் பேசி முடித்துக் கொள்ளுமாறு கூறியதாகப் புகார்தாரர் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே, முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையில் தற்போது ரூ.100 மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த விவகாரம் குறித்து வெளியே பேசினால் உள்ளூர் நபர்களைக் கொண்டு மிரட்டுவதாகவும், புகார் அளித்த பிறகு பெற்றோர்களை அழைத்து மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் எனவும், செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் குறைக்கப்படும் எனவும் தலைமை ஆசிரியர் ரவிசெல்வம் மிரட்டியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை என ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மாணவர் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களிடம் பணம் வசூலிக்க எவ்வித அரசாணையும் இல்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தொடர் புகார்கள் அளிக்கப்பட்டும் இதுவரை தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

