தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஜங்ஷன் பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கைலாசம் தலைமை தாங்கினார். இதில் திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்குப் பின் மாநிலத் தலைவர் கைலாசம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- கடந்த மூன்று ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்காததால், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மணல் லாரி உரிமையாளர்களும் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை அரசுக்கு நேரில் கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முந்தைய ஆட்சியில் மணல் குவாரிகளில் நடந்த சில முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்றதால் குவாரிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், தற்போது மணல் அள்ள எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. மேலும், சமீபத்தில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அதிக அளவில் மணல் தேங்கியுள்ளது. எனவே, அரசு உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, மணல் கிடைக்கும் பகுதிகளை கண்டறிந்து குவாரிகளை திறக்க ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். மணல் தட்டுப்பாட்டால் லாரி உரிமையாளர்கள் மட்டுமன்றி, சொந்த வீடு கட்ட நினைக்கும் ஏழை, எளிய மக்களின் கனவும் பாதிக்கப்பட்டுள்ளது. எம்-சாண்ட், பி-சாண்ட் தயாரிப்பிற்காக மலைகளை உடைப்பதால் இயற்கை வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாறாக, ஆற்று மணல் எடுப்பது இயற்கையைப் பாதிக்காது. வெள்ளத்தின் போது மணல் மீண்டும் இயற்கையாகவே சேமிக்கப்படும். எம்-சாண்ட் ஒரு யூனிட் ₹5,000-க்கும், பி-சாண்ட் ₹6000-க்கும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால், அரசு நேரடியாக ஆன்லைன் மூலம் ஆற்று மணல் விற்பனை செய்தால், ஏழை எளிய மக்களுக்கு ஒரு யூனிட் ₹2,500க்கே கிடைக்கும். ஆன்லைன் மூலமாகவே மணல் லோடு வழங்கி, ஆற்றுக்குள்ளேயே நேரடியாக லாரிகளில் ஏற்ற அனுமதித்தால் எந்தவித முறைகேடுகளும் நடக்க வாய்ப்பில்லை. எனவே, தமிழக முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் உடனடியாக இதில் தலையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்து போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
செய்திகள்
மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி, கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
🕒 27 அக்., 2026, 11:39 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி, கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
