திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை, அம்பலூர், குடையாட்சி உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் பழுதடைந்து சேதமடைந்து காணப்படுவதால், பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தப் பாலம் அப்பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து மார்க்கமாக விளங்கும் நிலையில், தரைப்பாலத்தின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களிலும் மற்றும் தினசரி அவசர தேவைகளுக்கும் இப்பாலத்தை நம்பி பல கிராம மக்கள் பயணிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக இந்தப் பாலத்தை நேரில் ஆய்வு செய்து, புதிய உயர் மட்டப் பாலத்தையோ அல்லது பாதுகாப்பான புதிய தரைப்பாலத்தையோ அமைத்துத் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.

