நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நிலப் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 88 வயது முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டைய கவுண்டர் (88). இவருக்குச் சொந்தமான நிலம் (சர்வே எண் 261A/2K, பட்டா எண் 233) தொடர்பாக, எல்லைகளை அளவீடு செய்து கம்பிவேலி அமைக்க வருவாய்த் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, குறுவட்ட அளவர் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நிலத்தில் நடப்பட்டிருந்த எல்லைக் கற்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முதியவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நிலத்தைப் பாதுகாக்கவும், எல்லைக் கற்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் பலனில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மொட்டைய கவுண்டர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தன் நிலத்திற்கும், உயிருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நிலப் பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

