இணையவழி நிதி மோசடிக்கு தனது வங்கிக் கணக்கை 'மியூல் கணக்காக' (Mule Account) பயன்படுத்த அனுமதித்த குற்றச்சாட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நெல்லை மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை டி.என்.எச்.பி. காலனி, அன்பு நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (31). இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி மத்திய மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
தேசிய இணையக் குற்றப் புகார் பதிவேற்று தளத்தில் (NCRP) பதிவான ஐந்து தனித்தனி புகார்களின் அடிப்படையில், திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மேலப்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் விக்னேஷ் பெயரில் இயங்கி வந்த கணக்கு, இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட சட்டவிரோதப் பணத்தைப் பெறுவதற்கான 'மியூல் கணக்காக' பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 29-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், பல்வேறு கட்டங்களாக (Layering) இந்த வங்கிக் கணக்கிற்குத் தொகைகள் வரவு வைக்கப்பட்டுள்ளன. கமிஷன் தொகையாசை காரணமாக, மோசடிப் பணத்தைப் பெறவும் அதை மாற்றவும் விக்னேஷ் தனது வங்கிக் கணக்கை அறிந்தே பயன்படுத்த அனுமதித்துள்ளார் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 112(2), 318(4) மற்றும் 3(5)-ன் கீழ் குற்ற எண் 306/2026 என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விக்னேஷைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இணைய மோசடி வழக்கில் சிக்கியதை அடுத்து, திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விக்னேஷ் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இணைய மோசடிக்காக தனது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்ட வழக்கில் அரசியல் கட்சி நிர்வாகி கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

