நெல்லை மாவட்டமருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 15 வயது பத்தாம் வகுப்பு மாணவி, குடும்பத் தகராறு காரணமாக கடந்த அக்டோபர் 15 அன்று வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற இரண்டு சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவி தனது ஆண் நண்பர் மற்றும் மற்றொரு சிறுவனுடன் ரயிலில் திருச்செந்தூருக்குச் சென்றது தெரியவந்துள்ளது. பயணத்தின் போது சிறுவர்கள் மாணவியிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதுடன், காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் சிறிதளவு பணத்தைக் கொடுத்துவிட்டு திருச்செந்தூரிலேயே அவரைத் தனியாகத் தவிக்க விட்டுச் சென்றுள்ளனர்.
திருச்செந்தூரில் தனியாகத் தவித்த சிறுமியை, மதுரையைச் சேர்ந்த கார்த்திக், சண்முகசுந்தரம் மற்றும் மணி ஆகியோர் குலசேகரப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணி என்பவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சண்முகசுந்தரத்துடன் தப்பியோடியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கார்த்திக் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி அக்டோபர் 16 அன்று மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கார்த்திக்கின் பிடியில் இருந்து அப்பகுதி மக்களின் உதவியுடன் தப்பிய சிறுமி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அடைந்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திருநெல்வேலி காவல்துறையினர் அக்டோபர் 17 அன்று சிறுமியை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மணி மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கார்த்திக் திண்டுக்கல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், மாணவியுடன் சென்று அவரைத் தனியாக விட்டுச் சென்ற இரண்டு சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறார் நீதிக் குழுமத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



