மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இரண்டு உட்கோட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள 14 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய எல்லைகளிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளைக் கண்டறிதல், மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்காணித்தல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்கள் மற்றும் சமூகக் கூடங்களின் நிலையை ஆய்வு செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும், காவல் நிலைய எல்லைகளில் வசிக்கும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், அவசர மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளைத் தயார் நிலையில் வைத்திருத்தல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மழையால் இடிந்து விழக்கூடிய ஆபத்தான கட்டடங்களைக் கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீட்பு மற்றும் தீயணைப்புப் பணிகளைத் துறையினருடன் இணைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
பேரிடர் மீட்புப் பணிகளுக்காகக் காவல்துறையிடம் உள்ள வாகனங்கள், மீட்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற காவலர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து, அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் அவசர உதவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையை 04364-222588 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

