விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நரிக்குடி-முக்குளம் கிராமத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பிறந்த வீடு கடுமையான சேதமடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தச் சூழலில், அந்த வீட்டைச் சீரமைத்து நினைவு இல்லமாக மாற்றவும், அதே இடத்தில் மணிமண்டபம் அமைக்கவும் கோரி மருதுபாண்டியர்களின் நேரடி வாரிசுதாரர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி உயிர் தியாகம் செய்தவர்களில் மருதுபாண்டியர் சகோதரர்கள் மிக முக்கியமானவர்கள் ஆவர். இவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 27-ஆம் தேதி காளையார்கோவில் பகுதியில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும், இவர்கள் பிறந்த இடமான விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள N.முக்குளம் கிராமத்தில் உள்ள இவர்களின் பூர்வீக வீடு போதிய பராமரிப்பின்றிப் பாழடைந்து வருகிறது.
சுதந்திரப் போராட்டத்திற்குக் பங்களித்த பல தலைவர்களின் பிறந்த வீடுகள் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டு, அரசு சார்பில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மருதுசகோதரர்களின் பிறந்த வீட்டையும் அரசுப் பராமரிப்பில் நினைவு இல்லமாக மாற்றி மணிமண்டபம் எழுப்ப வேண்டும் என்று வாரிசுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் காளையார்கோவிலில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுவதுபோல், இவர்களது பிறந்த இடத்திலும் அரசு விழாவாக மருதுபாண்டியர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்றும் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

