விருதுநகரில் தனியார் பேருந்து ஓட்டுநர் சோனைமுத்து வெளியிட்டுள்ள வைரல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று விருதுநகருக்குள் வராமல் பெயர்ப் பலகை மாற்றிப் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை எச்சரித்து நடவடிக்கை எடுத்திருந்தார். இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் தனியார் பேருந்து ஓட்டுநர் சோனைமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சிவகாசி மற்றும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்துகளுக்குக் குறிப்பிட்ட நேர அட்டவணை வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நேரத்திற்குள் பேருந்துகளை இயக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்குள் அனைத்துப் பேருந்துகளும் சென்றுதான் ஆக வேண்டும் என்று எம்.எல்.ஏ. கூறுவது குறித்துக் குறிப்பிட்ட அவர், நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசியல் மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் நேரங்களில் ஏற்படும் தாமதங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தனியார் பேருந்துகளுக்கான நேரத்தை முறையாக ஒழுங்குபடுத்தித் தர வேண்டும் எனத் கோரிக்கை விடுத்துள்ளார். அரசுப் பேருந்துகளுக்குக் கிடைக்கும் சலுகைகளும் நேர நெகிழ்வுகளும் தனியார் பேருந்துகளுக்குக் கிடைப்பதில்லை என்றும், போக்குவரத்து நெரிசலையும் மீறி உரிய நேரத்திற்குச் சென்று சேர வேண்டிய சிரமங்களை ஓட்டுநர்கள் எதிர்கொள்வதாகவும் அவர் அந்த வீடியோவில் ஆதங்கம் தெரிவித்தார்.
விருதுநகரில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் முறையான பாதையில் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கும் எம்.எல்.ஏ. அரசு பேருந்துகளையும் முறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். சரியான பாதையில் அனைவரையும் அனுமதித்தால், உரிய நேரத்தில் வேகக்கட்டுப்பாட்டுடன் பேருந்துகளை இயக்கத் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தயாராக இருப்பதாகவும் சோனைமுத்து அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

