மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 74 வயது மூதாட்டி மெஹர்நிஷா. இவர் தனது கணவர் மறைவுக்குப் பிறகு, மகன் இர்ஃபான், மருமகள் சாய்தா பானு (42) மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். மகன் இர்ஃபான் பணி நிமித்தமாக மலேசியாவுக்குச் சென்ற பிறகு, மருமகள் சாய்தா பானு தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மெஹர்நிஷா, தனது சகோதரர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த தனது ஆடைகளை எடுப்பதற்காக தனது சகோதரரின் மகள்களுடன் அவர் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது மூதாட்டியை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்த சாய்தா பானு, அவரது தாய் மற்றும் சகோதரிகள் இணைந்து மெஹர்நிஷாவை கை, கால் மற்றும் நெஞ்சில் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மூதாட்டியை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மூதாட்டியைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





