விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி கண்மாயில் லட்சக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாயில் கலந்திருக்கலாம் என்றும், இதன் காரணமாக மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தளவாய்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டியார்பட்டி கண்மாயில், மாங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் என்பவர் மீன்பாசி குத்தகை எடுத்து மீன்களை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கண்மாயில் வளர்க்கப்பட்டு வந்த ஏராளமான மீன்கள் திடீரென உயிரிழந்து நீரில் மிதந்துள்ளன.
கண்மாயை சுற்றியுள்ள பகுதியில் செயல்பட்டு வரும் சில நெல் அரைக்கும் ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேறி கண்மாயில் கலப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அந்த கழிவுநீரில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கண்மாய் நீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், நீரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், கண்மாய் அருகே மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் கூட அந்த நீரை குடிப்பதை தவிர்த்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே, கண்மாய் நீரை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தி, மீன்கள் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவுநீர் கலப்பு இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கண்மாய் நீரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

