தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் நாகை திருவள்ளுவன் சாடியுள்ளார். மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி சென்னையில் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்ப்புலிகள் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்டச் செயலாளர் தமிழ் முருகன் ஆகியோர் இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் நாகை திருவள்ளுவன், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், "தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த 60 நாட்களில் மட்டும் 9 ஆணவக் கொலைகள் அரங்கேறியுள்ளன. 3 வயதுக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய சூழலில், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சேலத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலை, சாதி வெறியர்களின் எதிர்ப்பின் காரணமாக இதுவரை திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். அங்கு உடனடியாக அம்பேத்கர் சிலையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், "ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" ஆகிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.
இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 22-ஆம் தேதி சென்னையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

