மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அதிகரித்த நீர்வரத்து
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து நீர்வரத்து ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்ததால் அருவியில் நீர்வரத்து சீராக இருந்து வந்தது. இதனால் பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கும்பக்கரை அருவிக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கும்பக்கரை அருவிப் பகுதிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நீர்வரத்து சீராகும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வனத்துறையின் எச்சரிக்கையை மீறி அருவிப் பகுதிக்கு செல்லாமல், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேவதானப்பட்டி வனச்சரகர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

