திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அருள்மிகு லட்சுமி, பூமாதேவி சமேத ஸ்ரீ சுழிகைக் கோவிந்தர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் பக்தி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீ சுழிகைக் கோவிந்தர் சுவாமிக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அருள்மிகு லட்சுமி, பூமாதேவி மற்றும் ஸ்ரீ சுழிகைக் கோவிந்தர் சுவாமிகளுக்கு சாமந்தி, சம்பங்கி, மல்லிகை, மஞ்சள் சாமந்தி, சிவப்பு சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவின் சிறப்பு நிகழ்வாக, 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கோவில் வளாகத்தில் வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என பக்தி முழக்கமிட்டு ஸ்ரீ சுழிகைக் கோவிந்தரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

