திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, கொடைக்கானல் - பழனி பிரதான சாலையில் பி.எல். செட் அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், ராட்சத பாறை உருண்டு விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் மழையின் தாக்கத்தால் மேல்மலை கிராமச் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதன் காரணமாகப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், காலையில் இயக்க அனுமதிக்கப்படும் வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



