விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு சுகாதார வளாகத்தின் ஒரு பகுதி தனியார் நிறுவனத்திற்காக இடிக்கப்பட்டதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், ஊராட்சிச் செயலாளர் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் சுமார் 350 குடியிருப்புவாசிகளின் பயன்பாட்டிற்காக, 14 கழிவறைகளுடன் கூடிய அரசு சுகாதார வளாகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் அதனை இடித்துவிட்டு, வெறும் 4 கழிவறைகள் மட்டுமே கொண்ட சிறிய வளாகமாக மாற்றி அமைத்ததில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், அருகிலுள்ள தனியார் பாலித்தீன் நிறுவனம் ஒன்று, தங்கள் வளாகத்திற்குச் செல்ல பாலம் அமைப்பதற்காக இந்தச் சுகாதார வளாகத்தின் ஒரு பக்கச் சுவரை இடித்து ஆக்கிரமித்துள்ளது. இதனைத் தடுக்க ஊராட்சி நிர்வாகம் தவறியதால், சுகாதார வளாகத்தைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் திறந்தவெளியைப் பயன்படுத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றச் செயலாளர் ரவி ஆகியோரை அழைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சிச் செயலாளர் ரவி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் ஆகியோரைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவர்களைப் பாய்ந்து தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைத் தடுத்து அழைத்துச் சென்றனர்.
தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தாமல், நியாயம் கேட்க வந்த பொதுமக்களிடம் அரசு அதிகாரி ஒருவரே ஆக்ரோஷமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

