கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட், தாந்தோன்றிமலை காவல் நிலையம் எதிரே உள்ள காவேரி நகர் 2-வது கிராஸில் வசித்து வருபவர் தர்மராஜ். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தொடர் விடுமுறை காரணமாக தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த அவர், குடும்பத்தினருடன் இன்று காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் 400 அமெரிக்க டாலர்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் உடனடியாக எதிரில் உள்ள தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள கல்லூரியில் பயிலும் மகளை விட்டுவிட்டு வரவிருக்கும் ஆசிரியரின் மனைவி சுகன்யா வீடு திரும்பிய பின்னரே, கூடுதல் விபரங்கள் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள காவலர் குடியிருப்பப் பகுதிக்கு அருகிலேயே நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

