நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அடுத்த எர்ணாபுரம் செங்கோடன்பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ஜெயபிரகாஷ் (27). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எர்ணாபுரம், செங்கோடன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மேலும், நாமக்கல்லில் உள்ள தனியார் மில் ஒன்றில் பிட்டராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி தனது சொந்த ஊரான வளையப்பட்டிக்குச் சென்றுவிட்டு மீண்டும் செங்கோடன்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த அரை பவுன் தோடு மற்றும் அரை பவுன் மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


