விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சுமார் 1,120 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, 560-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த மாதிரிப் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மாணவர்களின் அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கண்காட்சியில், விண்வெளி மற்றும் பிரபஞ்சம் தொடர்பான மாதிரி அமைப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. விண்வெளி வீரர்கள் மற்றும் ஏலியன் கதாபாத்திரங்களின் வேடமணிந்த மாணவர்களும் கண்காட்சிக்கு வந்தவர்களை கவர்ந்தனர்.
மேலும், சர் சி.வி.ராமன் உள்ளிட்ட புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களின் வேடமணிந்த மாணவர்கள், கண்காட்சி வளாகத்தில் வலம் வந்து பார்வையாளர்களை வரவேற்றனர். இது தேசிய அறிவியல் தினத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுடன், தொழில்நுட்பக் கல்வி, ஓவியக் கழகம் மற்றும் தொன்மைப் பாதுகாப்புக் கழகம் சார்ந்த மாணவர்களும் தங்களது புதுமையான படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தினர்.
மாணவர்களின் படைப்புகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய முயற்சிகளுடன், எதிர்காலத்தை கருத்தில் கொண்ட தொலைநோக்கு சிந்தனைகளும் இடம்பெற்றிருந்தன.
இந்தப் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சியை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருதுநகர் சுற்றுவட்டாரப் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நேரில் பார்வையிட்டு, மாணவர்களின் படைப்புகளை கண்டு ரசித்தனர்.

