தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, இன்று முதல் இலவச அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்றனர். விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கியிருந்து பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தேனியில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
தனியார் மினி பேருந்தில் கட்டணம் செலுத்திச் சென்ற மாணவர்கள்
விளையாட்டு விடுதியிலிருந்து பள்ளிகளுக்குச் செல்ல அரசு பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் தனியார் மினி பேருந்தில் கட்டணம் செலுத்திப் பள்ளிகளுக்குச் சென்று வந்தனர். இதனால் பேருந்துக் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், தங்களுக்கென அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றம்
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் அவர்களுக்காக அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இதனை தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்து காலையில் விளையாட்டு விடுதியிலிருந்து மாணவர்களை ஏற்றிப் பள்ளிகளில் இறக்கிவிடும். மாலையில் பள்ளிகளிலிருந்து மாணவர்களை மீண்டும் ஏற்றி விடுதியில் இறக்கிவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகத் தாங்கள் முன்வைத்து வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்றனர்.

