விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் சரணாலயம் என முக்கியமான வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும், பல அரிய வகை மூலிகைத் தாவரங்களும் இந்த வனப்பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்த நிலையில், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதேபோல் சதுரகிரி மலையை ஒட்டியுள்ள மாவூத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் குட்டம் பகுதியில் உள்ள பீட் எண் 6-லும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து பரவி வருவதால், வனப்பகுதியின் சில பகுதிகளில் புகைமூட்டம் காணப்படுகிறது. தீயின் தாக்கத்தால் அரிய வகை மூலிகைச் செடிகளும், சிறிய அளவிலான வனவிலங்குகளும் பாதிக்கப்படக்கூடும் என வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், மலைப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறை மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இரண்டு குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயின் பரவல் மற்றும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

