ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மணிராஜ் மற்றும் ராமராஜ் ஆகியோர் வழக்கம்போல மீன்பிடி தொழிலுக்காகக் கடலுக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் ஆழமான கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, தங்களது மீன்பிடி வலையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு அரிய வகை ஆமை சிக்கியுள்ளது.
உடனடியாக அந்த ஆமைக்கு எந்தவிதமான காயமும் ஏற்படாதவாறு மிகுந்த கவனத்துடன் அதை வெளியில் எடுத்த மீனவர்கள், அதன் உடலில் சிக்கியிருந்த மீன்பிடி வலைகளைப் பத்திரமாக அறுத்து விடுவித்தனர். பின்னர் அந்த ஆமையை மீண்டும் கடலிலேயே பத்திரமாக விட்டனர்.
கடல்வாழ் உயிரினங்கள் மனிதர்களின் கவனக்குறைவால் வலையில் சிக்கும்போது, அவற்றைத் துன்புறுத்தாமல் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விடுவது கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவசியமான ஒன்றாகும். ஆபத்தில் சிக்கிய உயிரைக் காப்பாற்றி மீண்டும் கடலில் விட்ட மீனவர்களின் இந்த மனிதாபிமான செயலையும், கடல்வாழ் உயிரினங்கள் மீதான அவர்களின் அக்கறையையும் அப்பகுதி மக்களும் இயற்கை ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

