விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பிரதான தொழிலான பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
சிவகாசியின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழும் பட்டாசுத் தொழிலையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பையும் சுட்டிக்காட்டும் நோக்கில் இந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இப்போட்டியானது ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் ஆண்களுக்கு 42 கி.மீ மற்றும் 21 கி.மீ தூரமும், பள்ளி மாணவர்கள் மற்றும் மகளிருக்கு 10 கி.மீ தூரமும், பள்ளி மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இப்போட்டியில் சிறுவர், சிறுமியருடன் இணைந்து 91 வயதான ராஜேந்திரன் என்ற முதியவர் 21 கிலோமீட்டர் பிரிவில் பங்கேற்று, நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைச் சீராகக் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவர் ஏற்கனவே சர்வதேச முதியோர் தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுப் பல்வேறு பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் நிறைவில், ஐந்து பிரிவுகளிலும் முதல் 10 இடங்களைப் பிடித்த வெற்றியாளர்கள் அனைவருக்கும் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

