வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு பின்புறம் இயங்கி வந்த ஸ்ரீ சப்தகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹரி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு கம்பெனியில், இரண்டு பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான சங்கீதா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்ததும் பள்ளிகொண்டா மற்றும் ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அணைக்கட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்து நடைபெற்ற பகுதியை வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.





