தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் சம்பா சாகுபடிக்கு நிபந்தனையின்றி புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான இடதுசாரி கட்சியினர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வேலை இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், டெல்டா மாவட்டங்களின் சாகுபடித் தேவைக்குத் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் மற்றும் எல்நினோ பாதிப்பால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் இயற்கை இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்ட நிலையில், போராட்டக்காரர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கைது செய்து அப்பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.



