Settings

முகப்பு/செய்திகள்/யானை புகுந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களை அழித்ததால் விவசாயி கண்ணீர்!
செய்திகள்

யானை புகுந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களை அழித்ததால் விவசாயி கண்ணீர்!

🕒 23 அக்., 2026, 09:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
யானை புகுந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களை அழித்ததால் விவசாயி கண்ணீர்!
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் காட்டு யானைகள் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 170 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயி நஷ்டஈடு கோரியுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 170 தென்னை மரங்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

சேத்தூர் ஒற்றைப்பனை காடு பகுதியில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோப்பு அமைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் 170 தென்னங்கன்றுகளை நட்டு, உரிய முறையில் பராமரித்து வந்துள்ளார். இதில் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் தற்போது பாளை விட்டுள்ள நிலையில், இன்னும் ஆறு மாதங்களில் பலன் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கிய மூன்று காட்டு யானைகள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தோப்பிற்குள் புகுந்துள்ளன. ஆரம்பத்தில் 25 மரங்களின் குருத்துகளை ஒடித்து சேதப்படுத்திய யானைகள், தொடர்ந்து மூன்று நாட்களாக தோப்பிலேயே முகாமிட்டு அனைத்து மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்ற போதிலும் யானைகளை விரட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஜெகநாதன் குற்றம் சாட்டியுள்ளார். வனத்துறையினரின் அலட்சியப் போக்கே தனது இந்த மாபெரும் இழப்புக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

நான்கு வருட உழைப்பு மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்களை இழந்து தவித்து வரும் தனக்கு, தமிழக அரசும் வனத்துறையும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔