நெல்லை டவுன் வாகையடி முனையில் திராவிடர் கழகத்தின் சார்பில் "எதிர் நீச்சலில் பெரியார்" என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் 80-வது ஆண்டு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை நெல்லையப்பர் கோவில் ரத வீதியில் நடத்தக்கூடாது என்றும், ஆவணி மூலத் திருவிழாவையொட்டி கொடியேற்றத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கடவுள் மறுப்பு மாநாடு நடத்தி பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்றும் கூறி, இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் மாநாட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு மாநாடு நடைபெறும் என திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாநாடு நடைபெறும் பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநாடு நடைபெறும் இடத்தில் போராட்டத்தை தடுக்கும் விதமாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அன்சூல் நகார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சூழலில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணி, பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியவாறு வாகையடி முனையில் இருந்து திராவிடர் கழக மாநாடு நடைபெறும் பகுதிக்கு செல்ல முயன்றனர். இதனை தடுத்து நிறுத்திய நெல்லை மாநகர போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி கைது செய்தனர். தொடர்ந்து திராவிடர் கழக மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் மாநாடு நடைபெற்றது.
செய்திகள்
நெல்லையப்பர் கோவில் ரத வீதியில் கடவுள் மறுப்பு மாநாடு: முற்றுகையிட முயன்ற இந்து முன்னணி, பாஜகவினர் 50 பேர் கைது
🕒 20 ஆக., 2026, 12:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
