அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு, கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய நிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஊர்வலமாக வந்த விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியபடி ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கைது செய்து ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

