அரசுத் துறைகளின் ஆய்வுகளால் காலவரையின்றி மூடப்பட்டுள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கக் கோரி, வரும் 12-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துகளைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து தீவிர ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் விளைவாக, ஏராளமான பட்டாசுத் தொழிற்சாலைகளுக்குக் காலவரையற்றத் தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரமின்றித் தவித்து வருகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அவசரப் பொதுக்குழுக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன:
வரும் 10-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலையில் மதுரை தொழிலகப் பாதுகாப்புத் துறை கூடுதல் இயக்குநரையும், அன்றைய தினம் மாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக்களை அளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆய்வுகளின்போது தற்காலிகத் தடையாணை பிறப்பிக்கப்பட்டால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அக்குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தொழிற்சாலையைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்; மேலும், தேவையற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையிலான ஆய்வுகளைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் வலியுறுத்தப்பட உள்ளன.
இது குறித்துச் சங்கத்தின் தலைவர் அருண் தெரிவிக்கையில், "எங்களது நியாயமான கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண வேண்டும். தவறும்பட்சத்தில், வரும் 12-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் அனைத்துப் பட்டாசுத் தொழிற்சாலைகளையும் மூடி, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

