தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அமைப்பின் விருதுநகர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம், மாநிலப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக உரிமைகள் மீட்பு, காவிரி நீர்ப் பிரச்சினை, கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகள் மற்றும் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களைக் கண்டித்து பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பிறகு மாநிலப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
தொகுதி சீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், அது தொடர்பாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற அரசின் அறிவிப்பையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரிக்கும் நடவடிக்கை, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் உரிமைகளையும் பறிக்கும் செயலாகும்.
இருப்பினும், தொகுதி சீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத சூழலில், அவசரகதியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது. காவிரி பிரச்சினையில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே முதல்வர் இக்கூட்டத்தைக் கூட்டியுள்ளாரோ என்ற அச்சமும் சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர் மேலாண்மைக் குழு உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு வர வேண்டிய 4.5 டி.எம்.சி நீர் இன்னும் வந்து சேரவில்லை. இதனால் காவிரி கரையை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கர்நாடக அரசுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, ஆகஸ்ட் மாதத்திற்குள் உரிய தண்ணீரைப் பெற்றுத் தந்தால் மட்டுமே தமிழகத்தில் குறுவை சாகுபடி சாத்தியமாகும்.
தமிழக முதல்வர் நேரடியாக கர்நாடகா சென்று அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்குள்ள சில கட்சிகளின் எதிர்ப்பால் அவரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரத்திற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவோ, மேகதாது விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தவோ தமிழக அரசு முன்வரவில்லை. எனவே, மேட்டூர் அணைக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் நீர் திறக்கப்படுவதை உறுதிசெய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
அதிமுக, திமுக அல்லாத மாற்று அரசை விரும்பிய மக்களுக்கு, தற்போதைய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து, பழிவாங்கும் எண்ணத்துடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், சமூக ஊடகங்களில் பதிவிடுவோரைக் கைது செய்வதும் வியப்பளிக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, மக்கள் நலனுக்காகப் பாடுபடுவதை அரசு செயலில் காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

