திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிரிவலப் பாதையிலும் குவிந்த குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியை மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தீபப் பிரசாதம் வழங்கப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடினர். இதனால் நகரின் முக்கிய வீதிகளிலும், கிரிவலப் பாதையிலும் அதிகளவில் குப்பைகள் சேர்ந்தன. இந்தத் தூய்மைப் பணிகளைத் தடையின்றி மேற்கொண்டு நகரின் சுகாதாரத்தைப் பேணிய தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்கள் கோவில் வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்குத் தீபப் பிரசாதத்தை வழங்கிக் கவுரவித்தார். இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.









