நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அடுத்த திருமணங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கார் மோதிய விபத்தில் 5ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணங்குடியைச் சேர்ந்த விஜய் என்பவரின் 10 வயது மகன் சஞ்சய், கீழையூர் அரசினர் தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று கடைக்குச் செல்வதற்காக சாலை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த கார் ஒன்று சிறுவன் மீது பின்பக்கமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவனை 108 அவசர ஊர்தி மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் சஞ்சய் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கீழையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

