தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தினமும் 5 லிட்டர் எரிபொருள் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டை பாலம் கீழ் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் செங்கொடி ஏந்தித் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டத்தால் ஆட்டோ தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஆட்டோக்களுக்குத் தினமும் தலா 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் இலவசமாக வழங்க வேண்டும், ஏழை ஆட்டோ தொழிலாளர்களின் சுமையைக் குறைக்க ஆட்டோ இன்சூரன்ஸ் தொகையை முழுமையாகத் தமிழக அரசே செலுத்த வேண்டும், பர்மிட் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டணத் தொகையை அரசே முழுமையாக ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆட்டோ தொழிலாளர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாகப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நிர்வாகிகள் எச்சரித்தனர்.



